எட்டு




 #எட்டு_மேல_எட்டு_வச்சு

கவிஞர் #சுகமதியான் மிகச் சிறந்த தமிழ் அறிஞர். தமிழின் நிகண்டை வடமொழிச் சொல் என்பாரிடத்தில் அது 'நிகழ்வு' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே என நிரூபித்தவர். அதன் பொருட்டு அவர்க்கு அஞ்சியே எனது இன்னொரு தமிழ் ஆர்வலர் நண்பர் #பார்த்திபன் 'நிகண்டு' எனவெழுதாமல் 'உரிச்சொற் பனுவல்' என்றெழுதுவார் என்பது இருக்கட்டும். நல்லது. அண்மையில், சுகமதியை நேர்கண்டேன் திண்டல் அருகே (தமிழ்க்கடவுள் முருகன் குடிகொண்ட தலங்களில் திண்டலும் ஒன்று). மனிதருக்கு எண்கணித ஜோதிடப் பித்து தலைக்கேறியிருந்தது. பேச்சுக்கு பேச்சு நியூமராலஜி ஆக்ஸிஜனேற்றமாய் கார்பன்டை ஆக்ஸைடை காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார். நானும் எண்கணிதம் பார்ப்பவன் எனினும் அதில் உடன்பாடு இல்லாதவன் - அதிகம் நம்பாதவன். உரையாடலில் "ராஜா, எட்டாம் நம்பர் எனக்கு ஒத்துக்காதுங்க" எனக் கூற எனக்கு 'சொரேல்" என்றது. 

"அருந்தமிழை அள்ளிப் பருகி தமிழ்ப்பற்று கொண்டவர்தாமே நீவீர்?"

"ஆமாம்.அதற்கென்ன இப்பொழுது?"

"தமிழின் முதலெழுத்து அகரம்தானே. அந்த #அ எழுத்து தமிழ் எண்ணாக வருகையில் #8 ஐத்தானே குறிக்குது ஏட்டுச் சுரைக்காயே" என தகித்தெரிந்தேன். யோசனையில்மூழ்கினார் கவிஞர் பெம்மான்.

மேலும், எண்கணிதம் என்பது 1 முதல் 8வரையான எண்களைக் கொண்டதுதானே என்பதையும் சுட்டினேன். தமிழ்மொழி உலகம் அறிந்த மொழியானது போலவே ஆங்கிலமும் அறியப்படக் காரணம் அதன் 26 எழுத்துக்களின் கூட்டுத் தொகையான (2+6=8) 8 ஆல் என ஏன் இருக்கக்கூடாது? தவிர, கவிஞரே உம்மிடம் நான் மயங்கியதே உமது எண்சீர் விருத்தத்தால்தானே? கலித்தொகை உம்மைக் கவர்ந்தது என அடிக்கடி புகழ்வீரே. கலி என்பதற்கு சனி என ஒரு பொருளுண்டே. அச் சனி எண்கணிதப்படி 8க்கு அதிபதிதானே" என மேலும் விளாசிவிட்டு "எனவே, எந்த எண்ணையும் எழுத்தையும் கண்ணெனப் போற்று" எனக் கூறி விடைபெற்று வீடேகினேன். 

அடுத்த நாள் காலை என் வீட்டிற்கு வருகை புரிந்து, "நேத்து பேச்சுப் பராக்குல ஒரு புத்தகத்தை சொன்னீங்களே. அது இருந்தா குடுங்க. படிச்சுட்டுத் தார்றேன்" என்று கேட்டார். 

அந்த புத்தகம் #இராம_வேல்முருகன் #கண்ணதாச_முருகன்_பொற்கைபாண்டியன்_பாலுகோவிந்தராசன் உள்ளிட்ட தமிழ்ஆளுமைகள் எண்மர் இயற்றிய அந்தாதித் தொகுப்பான #எண்மங்கலக்_கொத்து 

எடுத்துக் கொடுத்தேன். மகிழ்வெய்திச் சென்றார்.

இதில் எனக்கொரு வேதனை என்னவெனில், இரவல் வாங்கிச் செல்லும் எவரும் 

திருப்பித் தருவதில்லை என்னைப் போலவே. அநேகமாய், இவ்இடுகையை இனியவர் #இராம_வேல்முருகனார் கண்ணுறுங்கால் மீசை முறுக்கி மென்முறுவல் பூத்து #தொலைந்து_போன_கவிதைகள் பாகம் இரண்டு எனத் தொடர்வார் என எண்ணி...

https://www.facebook.com/100003791652687/posts/2459873294149035/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிரேக்க மகா காவியம் இலியட் / ஹோமர் வரலாறு/ Iliad/

கொண்டி மாடு